இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

by Staff / 16-02-2023 04:27:31pm
இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.இதனை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இவர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் கடந்த 13-ஆம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார். மேலும் தேர்தலை நேர்மையாகவும், நடுநிலையுடனும் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடத்துள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.இந்த நிலையில் ஈரோடு தேர்தல் முறைகேடு தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தொடர்ந்திருந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.வி சண்முகம் தரப்பில் 40, 000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் இரு முறை உள்ளது. மேலும் உயிருடன் இல்லாத 8,000-க்கும் மேற்பட்டோர் பெயர்கள் உள்ளது. 13, 000க்கும் மேற்பட்டோர் வேறு தொகுதிக்கு இடம் மாறியுள்ளனர். இதில் நிறைய முறைகேடுகள் உள்ளதால் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , இரட்டைப் பதிவு உள்ளார்களின் பட்டியல் தனியாக உள்ளன. சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய காவல் படையை சேர்ந்த 409 பேர் தேர்தல் பணியில் உள்ள்னர். பறக்கும்படைகள் உள்ளனர்.

தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முழுமையாக சிசிடிவி பதிவு செய்யப்படும். புகைப்பட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என உறுதியளித்தது.பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

 

Tags :

Share via