அக்னிபாத் திட்டம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களைத் தேர்வு செய்யும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்ற முடியும். இதில், 25 சதவீதம் பேர் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.இத்திட்டத்தின்கீழ் 46 ஆயிரம் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இதில், 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. பின்னர், 23 என வயது வரம்பை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.இத்திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இத்திட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. அதில், பணி நிரந்தரம், ஓய்வூதியம் போன்றவை இத்திட்டத்தில் இல்லை எனக் கூறப்பட்டது.இதைத்தொடர்ந்து, இந்த வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சத்தீஸ் சந்திர ஷர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர், கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (பிப்ரவரி 27) வழங்கப்பட்டது. அதில், நாட்டின் நலன் கருதி இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என உத்தரவிட்டு, இத்திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
Tags :