வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது
வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தலைவர் புவியரசன் கூறியு உள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறினார்.
மேலும், ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
தென் இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விலக 10 நாட்களுக்கு மேல் ஆகும். தென்மேற்கு பருவமழை விலகிய பிறகே, வடகிழக்கு பருவமழை தொடங்கும். அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு அல்லது இயல்பை ஒட்டிய அளவில் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 'சத்தியமங்கலம் 8 செ.மீ., சித்தார் 7 செ.மீ., பேச்சிப்பாறை, எமரால்ட் தலா 5 செ.மீ., பரங்கிப்பேட்டை, தீர்த்தாண்டதானம் தலா 4 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், சத்தியபாமா பல்கலைக்கழகம், புழல், பொள்ளாச்சி, திருக்கோவிலூர், திருபுவனம், பெரியாறு, ஊத்துக்குளி தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags :