விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி குமரி வருகை.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (வியாழக்கிழமை) முதல் 2 நாட்கள் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள நிகழ்ச்சியை முடித்ததும் அவர் 18-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கும் அவர் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட கார் மூலம் படகுத்துறைக்கு செல்கிறார். பிறகு தனிப்படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு ரசிக்கிறார்.பின்னர் விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அங்கு சிறிது நேரம் கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் அவர் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.அத்துடன் அவருடைய கன்னியாகுமரி சுற்றுப்பயண நிகழ்ச்சி முடிகிறது. பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.ஜனாதிபதியின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடு தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதாவது திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அங்குள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கி சோதனை செய்தது. அரசு விருந்தினர் மாளிகையில் ஹெலிபேடு இறங்கு தளத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி கொண்டது. இந்த மூன்று தளத்திலும் சோதனை நடந்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் மற்றும் அதிகாரிகளுடன் விமானப்படை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் நெடுஞ்சாலை நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி ராஜ், உதவி செயற்பொறியாளர் முருகேசன், வரவேற்பு துணை தாசில்தார் ஜவான், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் பரத், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags :