விமர்சகன்- கதையாசிரியர்: ஆர்.அருண்குமார்
சூர்யகாந்தனுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் போதும். வழக்கத்தைவிட சற்று உற்சாகம் அதிகம் கரை புரண்டோடும். காரணம் பிள்ளைகள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். மேலும் காலையிலேயே ஓடியாடி அலைய வேண்டாம். மற்ற நாள்களில் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து முடித்துவிட்டு பள்ளிக்கு பிள்ளைகளை கிளப்புவதற்குள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. தண்ணீர் பிடிப் பதிலிருந்து, கடைக்குச் சென்று காய்கறி, பால் மற்ற சமாசாரங்களை வாங்கிக் கொண்டு வந்து, மரகதத்துக்கு கூட மாட ஒத்தாசை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும்.
அப்படிப்பட்ட நேரத்திலும் கூட மனுஷி பாடாய்படுத்தி விடுவாள். நிம்மதியாக செய்தித்தாள்களை வாசிக்க முடியாது. எல்லாம் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றபிறகுதான்.
அதன்பிறகு சூர்யகாந்தன் ஓய்வாக அமர்ந்து செய்தித்தாள்கள், புத்தகங்களை வாசித்து விடுவான். இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டுமே, அதனால் அரக்கப்பரக்க வாசித்துவிட்டு கிளம்பவே நேரம் சரியாக இருக்கும்.
வங்கியொன்றில் வேலை பார்க்கும் சூர்யகாந்தனுக்கு இரு பிள்ளைகள். வருண் கல்லூரி இறுதியாண்டு படிக்கிறான். ஷக்தி இப்போதுதான் 8-ம் வகுப்பு படிக்கிறாள். மனைவி மரகதம் பட்டதாரி. ஒரு பள்ளியில் சிறிது காலம் ஆசிரியையாகப் பணியாற்றினாள். அதன்பிறகு பிள்ளைகளைக் கவனிக்கவே நேரம் சரியாக இருந்ததால் அந்த வேலைக்குச் செல்லவில்லை. மாலையில் சில குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவாள். அப்புறம் தையல் வேலையும் செய்வதுண்டு.
சூர்யகாந்தனைப் பொருத்தவரை நல்ல வேலை. கையில் பிடித்தம் இல்லாமல் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. நல்ல கலை ரசனை உண்டு. சின்ன வயதிலேயே சமர்த்தாக பதில் சொல்வது, பேசுவது அவனுக்கு கைவந்த கலை. வீட்டில் மொத்தம் 3 ஆண், 3 பெண். ஆறு பிள்ளைகளையும் அப்பா அழகுபோல வளர்த்தார். இலக்கியம், கணிதம், ஜோதிடத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஊரில் முக்கியப் புள்ளியும் கூட. காரணம் வீடுகள் கட்டித்தரும் வேலை. அந்த காலத்தில் 8-ம் வகுப்பு படித்தவர். நல்ல வாசிப்பும், நேசிப்பும் உண்டு. பிள்ளைகள் அத்தனைக்கும் காரணப் பெயர்களைச் சூட்டியிருந்தார்.
சூர்யகாந்தன் என்ற பெயரை அப்பா ஏன் வைத்தார் என்பதை பலமுறைக் கேட்டிருக்கிறான். ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவன். ஜெயகாந்தனை ரசித்துப் படிப்பவர் அப்பா என்பதால் இரண்டையும் இணைத்து அவனுக்கு இப் பெயரைச் சூட்டியதாக தெரிவிப்பார். அப்படித்தான் அனைவருடைய பெயரும் விசித்திரமாகவும், மிகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். அண்ணனுக்கு கலைச்சித்தன் என்று பெயர். காரணம் கலை, ஓவியத்தில் அவன் கில்லாடி என்பதால். இப்படி நிறையக் கூறிக் கொண்டே போகலாம்.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அம்மாவுக்கு சுட்டுப் போட்டாலும் படிப்பு வாசனை கிடையாது. கலா என்பதை மட்டும் எப்படியோ பிள்ளைகள் உதவியோடு எழுதக் கற்றுக் கொண்டார். அதுவும் எதற்காக தெரியுமா…? அண்ணன் மாதா மாதம் சென்னையிலிருந்து பணம் அனுப்புவார். அதைப் பெற கைநாட்டு உதவாது என்பதால் இந்த முயற்சி. யாராவது அம்மாவிடம், நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று கேட்டால் போதும். 6 பிள்ளைகள் படித்த படிப்பைக் கூட்டிக் கொள்ளுங்கள் என நகைச்சுவையாகச் சொல்வார். அந்த வரிசையில் முதலிடம் சூர்யகாந்தன்தான். எம்.ஏ. வரை படித்தான். தமிழில் நல்ல ஆர்வம் உண்டு. கிராமத்துப் பள்ளியில் முதல் மாணவன், கதை, கவிதை, கட்டுரை, பேச்சு அனைத்திலும் முதல் பரிசு பெறும் நபர் சூர்யகாந்தன். அப்பா, அம்மா மட்டுமல்ல சகோதர, சகோதரிகளும் சூர்யகாந்தனை உச்சி முகர்வார்கள். அதற்கும் காரணம் உண்டு. அவன் கடைக்குட்டிப் பிள்ளை.
8-ம் வகுப்பு படிக்கும்போதே வானொலிக்கு கேள்வி – பதில், கடிதங்கள் எழுதுவான். இதில் வேடிக்கை தனது நண்பர்கள், சகோதர, சகோதரிகளின் பெயர்களையும் குறிப்பிடுவான். நேயர்
கடிதம் வாசிக்கும்போது ஊர் பெயரைக் கூறி அத்தனை பெயர்களை வாசிக்கும் போது துள்ளிக் குதிப்பான்.
இப்படித்தான் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தபால்காரர் வீட்டுக்கு வந்து சூர்யகாந்தனுக்கு 100 ரூபாய் வந்துள்ளதாகக் கூறினார். பணத்தைப் பெற்றுக் கொண்டு அம்மாவிடம் கொடுத்து, காலில் விழுந்து வணங்கினான். அம்மா அழுதேவிட்டாள். கேள்விப்பட்ட அப்பாவுக்கு அளவு கடந்த சந்தோஷம்.
எதுக்காகப்பா இந்த பரிசு…? என்றார் அப்பா. வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பான நாடகம் ஒன்றில் கருமி கந்தசாமிக்கு லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு கிடைக்கும். அந்த தொகையைப் பெற்ற கந்தசாமி, யார் யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டும் என ஒரு பட்டியலை விறுவிறுவென்று வாசிப்பான். அதை கவனமாக கேட்டு தொகை எவ்வளவு என கேள்வி கேட்டனர். மிகச் சரியான பதிலை எழுதியதற்காகத்தான் இந்த பரிசு என்றான்.
இப்படி ஒன்றல்ல..இரண்டல்ல ஏராளமான பரிசுகள். சிறுவயதிலேயே சம்பாதிக்கக் கற்றுக் கொண்டவன் சூர்யகாந்தன். புகழ், பணம் என படிப்படியாக முன்னேறி இன்று இரு குழந்தைகளுக்கு தந்தை.
ஏய் மரகதம்… கொஞ்சம் காபி கொடு. என்றவாறே அன்று வந்த செய்தித் தாள்களை புரட்ட ஆரம்பித்தான். பசங்க இரண்டு பேரும் டிவியில் மூழ்கியிருந்தனர். மரகதம் சமையலறையில் போராடிக் கொண்டிருந்தாள்.
தினமும் அனைத்து செய்தித்தாள்களை வாசித்துவிடுவான். வீட்டில் ஒரு சில செய்தித்தாள், இதழ்கள் வாங்குவான். மீதீயை அருகில் உள்ள நூலகத்தில் படித்துவிடுவான். சிறுவயதிலிருந்தே அவனிடம் உள்ள பழக்கம், வாசகர் கடிதம், கேள்விகள் கேட்டு எழுதுவது. இன்றும் அதைத் தொடர்கிறான். யாராவது கவிதை, கதையை சுவாரசியமாக எழுதியிருந்தால் அடுத்த நிமிடம், தபால் எழுதிவிடுவான். பாராட்டு, விமர்சனம் அவனுக்கு கைவந்த கலை.
அடிக்கடி தன் வீர, தீர பிரதாபங்களை மனைவி, பிள்ளைகளிடம் கூறுவான். அதை யாரும் காதில் வாங்க மாட்டார்கள். என்னோட ரசனைக்கு நேர் மாறா வந்திருக்கீங்க..என்று திட்டுவான்.
ஏன்டா. வருண். இந்த வார மணிமலர்ல வந்திருக்க கவிதையைப் படிச்சியா..? அடடா என்ன அற்புதமா எழுதியிருக்கார் தெரியுமா அந்த கவிஞர், நீயும்தான் இருக்கியே…என்றான்.
உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. உங்க ரசனை மாதிரி எல்லாருக்குமா இருக்கும்.. விடுங்க. நீங்க பெரிய விமர்சகர். எழுத்தாளர்தான். நான் ஒத்துக்கறேன். அதுக்காக பிள்ளைங்ககிட்டேயும் அதை எதிர்பார்க்காதீங்க..அவங்க விருப்பம் என்னன்ணு நமக்கு தெரியுமா? மரகதம் அறிவுரை வழங்க காதில் போட்டுக் கொள்ளவில்லை சூர்யகாந்தன்.
வழக்கம்போல அஞ்சல் அட்டையை எடுத்தான். கவிஞர் இந்திரகுமாருக்கு.. என தொடங்கி பாராட்டு மழை பொழிந்தான். நீண்ட நேரம் கவிதையை வாசித்து.. வாசித்து மகிழ்ந்தான். பின்னர் அக்கடிதத்தை படுசிரத்தையுடன் எடுத்துக் கொண்டு தபால் அலுவலகத்துக்குச் சென்றான்.
அன்று -
வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பினான் சூர்யகாந்தன். குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தனர். மரகதம் கொஞ்சம் காபி கொடு. களைப்பா இருக்கு என்றவன் நாற்காலியில் அமர்ந்தான்.
என்னங்க.. வருண் காலையிலிருந்து உங்களை எதிர்பார்த்துக் காத்திட்டிருக்கான் என்றாள் மரகதம்.
என்னவாம். சுற்றுலா, விளையாட்டுப் போட்டிக்கு எங்கேயும் போறானா? தெரியலை. அவனை கூப்பிடறேன். கேளுங்க – என்ற வசந்தி வருணை அழைத்தாள். கூடவே ஷக்தி.
என்னப்பா.. என்னை தேடினியாமே..?
அதற்குள் முந்திக்கொண்ட ஷக்தி, அப்பா..உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திட்டிருக்கு..
அம்மாவுக்கு கூட தெரியாது என்றாள். அப்போதுதான் அதையும் கேட்டாள் மரகதம்.
அறைக்குள் இருந்து வந்த வருண் கையில் ஒரு பெரிய பழுப்பு நிறக் கவரை எடுத்து வந்தான். அப்பா.. இதைப் பிரிச்சுப் பாருங்க.. என்றான்.
அதை வாங்கிய சூர்யகாந்தன், ஆர்வமாய் பிரித்தான். கூடவே மரகதமும் பரபரப்புடன் நின்றாள். உள்ளே மணிமலர் – இதழ், கூடவே நிறைய கடிதங்கள். அதில் இருந்த ஒரு அஞ்சல்அட்டை சூர்யகாந்தனை கவர, கையில் எடுத்துப் படித்தான்.
அது அன்புள்ள இந்திரகுமாருக்கு. என மணிமலர் ஆசிரியருக்கு சூர்யகாந்தன் எழுதிய கடிதம். அதைப் படித்ததும் சூர்யகாந்தனுக்கு கண்ணீர் வந்தது.
மரகதம்.. இது..இது.. கவிஞர் இந்திரகுமாரை பாராட்டி நான் எழுதிய கடிதம். இது எப்படி? சூரியகாந்தனால் நம்பமுடியவில்லை.
அப்பா.. நான் சொல்றேன். புனைபெயரில் அண்ணன் எழுதிய கவிதையை அவனோட நண்பன் மணிமலருக்கு அனுப்பினாம்.
அதை பிரசுரிச்சு கூடúóவ பாராட்டி வந்த கடிதங்களையும்அனுப்பியிருக்காங்க என்று ஷக்தி சொல்ல சொல்ல ஆனந்தத்தில் அருணை கட்டித் தழுவினான் சூர்யகாந்தன்
----
Tags :