அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் தங்களை தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 1, 311 தற்காலிக ஊழியர்கள் தங்களை நிரந்தரம் செய்யக்கோரி, நேற்று சட்டசபையை முற்றுகையிட்டு சோனாம்பாளையம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இச்சம்பவம் புதுச்சேரியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக இன்றைய சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பில், புதுச்சேரி மாநிலத்தில்பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் தற்காலிக ஊழியர்களுக்கான ஊதியம் ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
Tags :