கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்

by Staff / 02-04-2023 12:16:04pm
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தல் நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, காஞ்சிபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ரயில் நிலையத்திற்கு சென்று கண்காணித்தனர்.அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த மதுரையைச் சேர்ந்த குருநாதன், ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குஞ்சலோவராஜு ஆகியோரை சோதனையிட்டனர்.இதில் குருநாதன் வைத்திருந்த பையில் இருந்து 24 கிலோ கஞ்சாவும், குஞ்சலோவராஜுவிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.தேசத்தின் பாதுகாப்பு சவாலாகவும், சமுதாயத்துக்கு அச்சுறுத்தலாகவும், எதிர்கால தலைமுறையை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை விதித்தால் மட்டுமே போதைப் பொருள் கடத்தலை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via