நீச்சல் குளத்தில் சிறுவன் மரணம்... கதறியழுத தந்தை..

பெரியமேட்டில் இயங்கி வரும் மை லேடி (My Lady) என்ற நீச்சல் பயிற்சி குளத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சென்னை பெரியமேடு போலீசார் அளித்த தகவலின்படி, கொசப்பேட்டை, பட்டாளம் ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவரது 7வயது மகன் தேஜஸ் குப்தா வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக பெரியமேடு பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் சேர்த்து விட்டுள்ளனர். நேற்று மாலை வழக்கம் போல சிறுவனின் தாத்தா சசிக்குமார் மற்றும் தந்தை ராகேஷ் சிறுவனை நீச்சல் பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது பயிற்சியாளர் செந்தில் மற்றும் சுமன் ஆகியோர் 4அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் 15 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பிளாஸ்டிக் லேடரை பிடித்து கொண்டிருந்த சிறுவன் தேஜா குப்தா எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதாக தெரிகிறது.
மயங்கிய பின்னரே சிறுவனைக் கண்டறிந்த பயிற்சியாளர் செந்தில் உடனடியாக மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :