கடன் சத்ரு நோய் மூன்றும் தீர்க்கும் சக்தி வாய்ந்த கோவில் 

by Editor / 24-07-2021 05:25:43pm
கடன் சத்ரு நோய் மூன்றும் தீர்க்கும் சக்தி வாய்ந்த கோவில் 

 

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில்,
அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர்.

பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது.


இதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார்.
மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.

இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.

அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.


எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை பதினோரு வாரங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும்.

 

Tags :

Share via