எங்கள் ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள்-விஜய்.
கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறிய விஜய், சேலத்தில் இருந்து டிசம்பர் 4 ஆம் தேதி முதல் பரப்புரை பயணத்தை தொடங்க முடிவு செய்த நிலையில், சென்னை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க உள்அரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. 2,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. பொதுவெளியில் இல்லாமல், முழுக்க முழுக்க உள் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார். பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார் என எம்ஜிஆர் பாட்டு பாடியிருப்பார். அப்படிப்பட்ட நம் அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் தான் இந்த காஞ்சிபுரம். தன்னுடைய வழிகாட்டி என்பதாலேயே தான் ஆரம்பதித்த கட்சி கொடியில் அண்ணாவை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால், அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருந்தாலும் நாங்கள் அதை கண்டுகொள்ள போவதில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் நம் மீது வன்மத்துடன் இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்லை. ஆனால், என்னை, உங்களை எல்லோரையும் பொய் சொல்லி ஓட்டு போட வைத்து ஏமாற்றி, ஆட்சிக்கு வந்து, நல்லது செய்வது போல நாடகம் ஆடுகிறார்களே அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும். அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை.
காஞ்சிபுரத்துக்கும் நமக்கும் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பு உண்டு. ஏனென்றால் நம் முதல் களப்பயணத்தை தொடங்கியதே பரந்தூரில் தான். அந்த மண்ணில் நின்று, அந்த மக்களுக்காக கேள்வி கேட்டேன். அதன்பிறகு மன வேதனைக்குப் பிறகு தற்போது அண்ணா பிறந்த காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளேன். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
எங்கள் ஆட்சி அமைந்தால், அனைவருக்கும் வீடு கட்டி கொடுப்போம். வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் கொடுப்போம். கார் வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்துவோம். பட்டதாரிகள் உருவாக வேண்டும். அரசு மருத்துவமனைக்கு மக்கள் வரும் வகையில் மாற்ற வேண்டும். மீனவர்கள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கருத்து கேட்டு அதனை செயல்படுத்துவோம். சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். அண்ணா பல்கலைகழகம், கோவை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். இதை செயல்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும்” என்றார்.
Tags : எங்கள் ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள்-விஜய்.


















