விவசாயியிடம் ரூ. 35 லட்சம் மோசடி4 பேர் மீது வழக்குப்பதிவு

by Staff / 15-04-2023 01:28:48pm
விவசாயியிடம் ரூ. 35 லட்சம் மோசடி4 பேர் மீது வழக்குப்பதிவு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 62). விவசாயி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு எடப்பாடி தாலுகாவில் தனியார் கியாஸ் நிறுவனம் ஒன்றில் வினியோகஸ்தர் உரிமம் பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் விஜய்லட்சுமணன் என்பவர் அறிமுகமானார்.அப்போது துரைசாமியிடம் அவர் சென்னையில் கியாஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதற்கான அடையாள அட்டையை காண்பித்ததுடன் உங்களுக்கு கியாஸ் வினியோகஸ்தர் சம்பந்தமான அனைத்து வேலையையும் பெற முடியும் என்றார். இதையடுத்து கியாஸ் வினியோகஸ்தர் உரிமம் பெற்று தருவதாக கூறி துரைசாமியிடம் இருந்து ரூ. 20 லட்சத்தை விஜய்லட்சுமணன் ரொக்கமாக பெற்றார். சில நாட்கள் கழித்து அவர் தன்னுடன் பணிபுரிவதாக ஸ்ரீதர், திருமலை மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை துரைசாமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவரிடம் வினியோகஸ்தர் தொடர்பான வேலை 60 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், 40 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் விஜய்லட்சுமணன் கூறினார். மேலும் அவர் இந்த வேலையை முடிப்பதற்காக ரூ. 15 லட்சத்தை அந்த 3 பேரிடம் கொடுக்குமாறு தெரிவித்தார். இதையும் உண்மை என அவர் நம்பி அந்த தொகையை துரைசாமி அவர்களிடம் கொடுத்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவர்கள் துரைசாமிக்கு வினியோகஸ்தர் உரிமம் வாங்கி கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து விஜய்லட்சுமணன் உள்பட 4 பேர் குறித்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் துரைசாமி விசாரித்தார். அப்போது தான் விஜய்லட்சுமணன் உள்பட 4 பேரும் அங்கு வேலை பார்க்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த துரைசாமி இதுகுறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா விசாரணை நடத்தினர். இதையடுத்து கியாஸ் வினியோகஸ்தர் உரிமம் பெற்றுவதாக கூறி துரைசாமியிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்த விஜய்லட்சுமணன், ஸ்ரீதர், திருமலை, வெங்கடேஷ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via