23 லட்சம் பறித்த 2 பேர் கைது 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

by Staff / 29-05-2023 01:47:49pm
 23 லட்சம் பறித்த 2 பேர் கைது 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னிமலை அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 23 லட்சம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கிளை நிறுவனம் அதே பகுதியான ஈங்கூர் பாலப்பாளையம் அருகே செயல்படுகிறது. இந்த கிளை நிறுவனத்தில் இருந்து கடந்த 23-ந் தேதி சத்தியமூர்த்தி ரூ. 23 லட்சத்துடன் காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்து கை, கால்களை கட்டி அவரை காருடன் கடத்தி சென்றனர். பின்னர் ஈரோடு அருகே ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் அருகில் உள்ள காட்டு பகுதியில் சத்தியமூர்த்தியிடம் இருந்த ரூ. 23 லட்சம் மற்றும் அவரது செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நால்ரோடு என்ற இடத்தில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு: - புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கண்ணங்குடி அருகே உள்ள கள்ளர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகர் (வயது 29). மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் நவநீதன் (27). மனோகர் சத்தியமூர்த்தி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நவநீதனும் அதே நிறுவனத்தில் 6 மாதங்கள் வேலை செய்துள்ளார். அதன்பின்னர் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மனோகரும், நவநீதனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மனோகர் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் சத்தியமூர்த்தி பண பரிவர்த்தனைக்காக அதே பகுதியில் உள்ள கிளை நிறுவனத்துக்கு சென்று வந்ததை கண்காணித்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் நவநீதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் மனோகரும், நவநீதனும் தங்களது உறவினர்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து அனைவரும் சேர்ந்து சத்தியமூர்த்தியிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி மனோகர் மற்றும் நவநீதனின் உறவினர்கள் 4 பேர் சத்தியமூர்த்தியை கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காரில் சென்றபோது அவரை கடத்தி சென்று ரூ. 23 லட்சத்தை பறித்துவிட்டு தப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பணம் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்ததாக மனோகரையும், நவநீதனையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பணத்தை கொள்ளையடித்து சென்ற முக்கிய குற்றவாளிகளான மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via