மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பிற்க்காக சென்ற வாகனம் மோதி ஒருவர் பலி.
தென்காசி மாவட்டம், தென்காசி பகுதியில் இருந்து கடையம் பகுதியில் ஆய்வு பணிக்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சென்று கொண்டிருக்கும்போது, தென்காசி அருகே உள்ள கண்டமங்கலம் விலக்கு என்ற பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்திற்கு பின்னால் அவரது பாதுகாப்புக்காக சென்ற அதிவிரைவு படை வாகனம் மோதி இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அந்த வாகனத்தில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில், அதிவிரைவு படை வாகனம் மோதி படுகாயம் அடைந்த ஒரு நபர் மருத்துவமனை வரும் வழியிலே உயிரிழந்தார்.
மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் தற்போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு வந்து படுகாயம் அடைந்தவர் உடல் நலம் குறித்து விசாரணை நடத்தினார்.
மேலும், உயிரிழந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் ஆய்க்குடி பகுதியை சேர்ந்த ஆறுமுகசாமி என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், படுகாயம் அடைந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பாதுகாப்புக்கு சென்ற அதிவிரைவு படை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















