வரிவசூல் செய்ய கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் சென்ற நகராட்சி ஊழியர்கள் - சிசிடிவி காட்சிகள் வைரல்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வீரகேரள விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், செங்கோட்டை நகராட்சி ஊழியர்கள் கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் சென்று வீட்டு வரி கட்டவில்லை என்றால் வீட்டை இன்ச் பை இன்ஞ்சாக இடித்து விடுவதாகவும், குடிநீர் வினியோகத்தை துண்டித்து விடுவதாகவும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த வீட்டின் உரிமையாளர் வரிகட்டும் வரை இங்கிருந்து நகராட்சிக்கு வராதீர்கள் எனக்கூறி இரண்டு நகராட்சி பணியாளர்களை அவரது வீட்டு வாசலில் கந்துவட்டி காரன் போல அமர வைத்து சென்றுள்ளனர்.
இதனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளான நிலையில், நகராட்சி ஊழியர்கள் கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் வரி வசூல் செய்ய வந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இந்த நிலையில், இது தொடர்பாக நகராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.
குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாநகராட்சியில் வரி வசூல் செய்வதற்காக கடப்பாரையுடன் சென்ற இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அராஜக சம்பவம் செங்கோட்டையில் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது
Tags : வரிவசூல் செய்ய கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் சென்ற நகராட்சி ஊழியர்கள் - சிசிடிவி காட்சிகள் வைரல்.