திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 02.11.2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக வருகின்ற 06.11.2024 மற்றும் 07.11.2024 ஆகிய இரு தினங்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி மேற்படி இரண்டு தினங்கள் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மேற்படி இரண்டு தினங்களில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி மார்க்கமாக உவரி கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லவும். அதேபோன்று கன்னியாகுமரியிலிருந்து வரும் தனியார் வாகனங்களும் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து திருநெல்வேலி மார்க்கமாக உவரி வழியாக வரவேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
எனவே இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags : திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்.