சந்தன மரங்களை வெட்டிய நபர்கள் - செல்போன் எண் கண்காணிப்பின் மூலம் தமிழகத்தை சேர்ந்த மூன்று நபர்கள் கைது.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் சந்தனக்காடு என்ற ஒரு பகுதி உள்ளது. கேரளா வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சந்தனக்காடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி சில நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக தெரிந்து கொண்ட வனத்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் மற்றும் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் பதிவான செல்போன் எண்களின் நெட்வொர்க்கை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தமிழகத்தை சேர்ந்த நபர்கள் என்பது தெரியவரவே, கேரளா வனத்துறையினர் கடந்த சில தினங்களாக தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சந்தன மரங்களை வெட்டிய புளியரை பகுதியை சேர்ந்த மணிகண்டன், அஜித்குமார், குமார் ஆகிய 3 நபர்களையும் தற்போது கேரளா வனத்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களிடம் இருந்து சந்தன மரக் கட்டைகள் மற்றும் அதனை வெட்ட பயன்படுத்திய வாள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : சந்தன மரங்களை வெட்டிய நபர்கள் - செல்போன் எண் கண்காணிப்பின் மூலம் தமிழகத்தை சேர்ந்த மூன்று நபர்கள் கைது.