லாரி அதிபர் கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

by Staff / 18-08-2023 04:38:36pm
லாரி அதிபர் கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). லாரி அதிபரான இவர் சங்கரப்பேரி ரோட்டில் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை 5. 50 மணி அளவில் தனது லாரி புக்கிங் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார்.அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், திடீரென மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை சக்திவேல் மீது வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். பின்னர் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்தார். மேலும் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் சதுரகிரி ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் சென்றுள்ளனர். போலீசாரை பார்த்ததும், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, சக்திவேல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.இதையடுத்து விருதுநகர் போலீசார் தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தூத்துக்குடியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று அதிகாலையில் விருதுநகருக்கு சென்றனர். அங்கு பிடிபட்ட 3 பேரையும் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன் ஆவார். தப்பி சென்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via