மாதா பேராலயத்தில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா கடந்த ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை நடந்தது. 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து பனிமய மாதா தங்கத்தேர் பக்தர்கள் தரிசனத்துக்காக பேராலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தங்கத்தேரை பார்வையிட்டு அன்னையை வழிபட்டு செல்கின்றனர்.மேலும் ஆலய தங்கத்தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று 25 ஜோடிகளுக்கு இலவச கூட்டு திருமணம் நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமை தாங்கி கூட்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேராலய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணமக்களுக்கு தேவையான சீர்வரிசை பொருட்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags :