பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் (கட்டுரை )

by Editor / 24-07-2021 08:12:32pm
பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் (கட்டுரை )


தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
அத்தியாயம் 1

வித்தக விநாயகர் கைலாயத்தில் ஒரு நாள், அன்னை பார்வதியும் அத்தன் பரமேஸ்வரனும் ஓரிடதில் அமர்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் உட்கார்ந்திருக்கிறார் முத்த பிள்ளை விநாயகர். பிள்ளையை மிக்க வாஞ்சையுடன் அணைத்துத் தாயும் தந்தையும் மாறி மாறி முத்தமிட்டு மகிழ்கிறார்கள். இந்த நிலையில் இந்தக் குறும்புக்காரப் பிள்ளை ஒரு வேடிக்கை பண்ண நினைக்கிறார்.

அன்னையும் அத்தனும் முத்தமிட விரும்பிய நேரத்திலே தன்னுடைய முகத்தைக் கொஞ்சம் பின்னால் இழுத்துக் கொள்கிறர். அவ்வளவுதான், அன்னையும் அத்தனுமே முத்தமிட்டுக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர். இதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார் இந்தப் பிள்ளையார். இப்படி ஒரு கற்பனை, ஒரு கவிஞனுக்கு. மும்ன்மைப் புவனம் முழுதீன்ற முதல்வியோடும், விடைப்பாகன் 'அம்மை தருக முத்தம் என அழைப்ப, ஆங்கே சிறிதகன்று தம்மின் முத்தம் கொள நோக்கி சற்றே நகைக்கும் வேழமுகன் என்ற காப்புக் கூறுகிறான் கவிஞன், தான் எழுதிய சிறு காப்பியமாம் நந்திக் கலம்பகத்தில்.

இந்தப் பிள்ளை, தன் தாய் தந்தையர்களையே சிரிக்க வைக்கிறது ஒரு தடவை. ஆனால் இந்தப்பிள்ளையை சிரிக்க அடித்து விடுகிறார்கள், சின்னஞ் சிறிய ஊரில் உள்ள செல்வச் சிறுமியர் சிலர். சிறு விடு கட்டி விளையாடுகிறார்கள் சிறுமியர்கள். அங்கு மண்ணாலேயே சோறு, மண்ணாலேயே கறி எல்லாம் ஆக்குகிறார்கள். இந்த இடத்திற்கு வருகிறார் பிள்ளையார், தன் தொந்தி வயிற்றைத் தள்ளிக் கொண்டு. இதைக் கண்டு சின்னப் பெண்கள் சிரிக்கிறார்கள் கலகல என்று. பிள்ளையாருக்குப் கோபம் வருகிறது.

உடனே அவர்கள் கையால் இழைத்த சிற்றிலை இவர் காலால் அழிக்க முற்படுகிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு சிறு பெண் - குறும்புக்காரப் பிள்ளையாருக்கு ஏற்ற குறும்புக்காரப் பெண்தான் - முன் வந்து பிள்ளையாரிடம் சொல்கிறாள், `பிள்ளையாரே! பிள்ளையாரே! உமக்கு ஏன் எங்கள் மேல் இத்தனை கோபம். சிறு வீடு கட்டி சோறு எல்லாம் ஆக்கி வைத்த பின், கூட இருந்து சாப்பிடுவித்தக விநாயகர் 2 வதற்கு ஆள் இல்லையே என்று நாங்கள் வருந்திக் கொண்டிருந்தபோது, விருந்தினராகத் தாங்கள் வந்தீர்கள்.

அதனால் எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி, அதனால்தான் அப்படிச் சிரித்து உம்மை வரவேற்றோமே அல்லாமல், உம்முடைய யானை முகத்தையும், தொந்தி வயிற்றையும், குட்டைக் காலால் நீர் நடந்து வரும் அழகையும் கண்டு கேலி பண்ணிச் சிரிக்கவே இல்லையே! என்று பேசுகிறாள். கோபமாக இருக்கும் பிள்ளையாரைச் சமாதானப்படுத்தும் பாவனையில், அவர்கள் உண்மையிலே எதற்காகச் சிரித்தார்கள் என்பதையும் நல்ல நகைச் சுவையோடு, சொல்லாமல் சொல்லிவிடுகிறாள் இந்தப் பெண்.

இதைச் சொல்கிறது ஒரு பாட்டு விருந்து விளிப்போம் எனக்கருதும் வேளை அடிகேள், இவண் நீயே விரும்பி வந்தாய் என மகிழ்ச்சி மீக்கூர்தலினால் செவ்வாயின் முருந்து தோன்ற முறுவலித்தேம் அல்லால் ஒருநின் கரிமுகம் போல்முகமும், பூதப் பெரு வயிறும், முடங்கும் குறள்தாள் தகு நடையும் இருந்தவாறு நோக்கி நகைத்திட்டேம் அல்லேம். என்று அழகாகப் பாடுகிறார் கவிஞர். இப்படி எல்லாம் மற்றவர்களை ஹாஸ்யத்திற்கு உள்ளாக்கி, தானுமே அந்த ஹாஸ்யத்திற்கு உட்பட்டு இருக்கும் பிள்ளையாரை வித்தக விநாயகர் என்று கூறாமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது? வித்தகர் என்றால் ஞானவான், சாமர்த்தியசாலி, அதிசய புருஷர் என்றுதானே பொருள்.
(தொடரும் )

 

Tags :

Share via