உலகையே திரும்பச்செய்த 3-தமிழர்கள் 3-சந்திரயான்கள்
விண்வெளித்துறையில் சாதனை படைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள சந்திரயான் 3-ன் மூலம் வலிமையான இந்தியா என்று இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயானின் உருவாக்கத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக தமிழர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. ‘நிலவு மனிதன்’ என்று அழைக்கப்படுகிறார். இவரது திட்டத்தினால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் தான் நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து உலகளவில் இந்தியா சாதனை படைத்தது.
உலகமே வியந்து பார்த்த சந்திரயான் 2 திட்டத்தை தயாரித்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா முத்தையா ஆவார். 2006 ஆம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற வனிதா முத்தையா இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.(சந்திரயான் 2 விண்கலம் கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி 95 சதவிகிதம் சென்ற சந்திரயான் 2 இறுதி நேரத்தில் தரையிறங்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தோல்வியடைந்தது.)
கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குனராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். வீரமுத்துவேல் தலைமையிலான குழு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு வகையான ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பிறகு சந்திரயான் 3 விண்கலத்தை தயாரித்தது. குறிப்பாக சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட கோளாறுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தி சந்திரயான் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டது.
உயர் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் குறித்தான ஆய்வில் ஆர்வம் கொண்ட வீரமுத்துவேலின் முழு ஈடுபாட்டில் சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.விண்ணை நோக்கி சென்ற சந்திரயான் 3 பல்வேறு கடினமான கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்து இன்று நிலவில் கால்பதித்து உலக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.இந்த 3 தமிழர்களின் முயற்சியினால் உலகமே இந்தியாவை திரும்பிபார்க்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : 3-தமிழர்கள் 3-சந்திரயான்கள்