ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Staff / 25-08-2023 01:49:02pm
ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சர்  மா. சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மொத்தம் ரூபாய் 12. 66 கோடி மதிப்பிலான ரூ. 8. 72 கோடி மதிப்புடைய நவீன 1. 5 டெஸ்லா எம்ஆர்ஐ எந்திரம் மற்றும் ரூ 3. 94 கோடி மதிப்பிலான குடல், இரைப்பை உள்நோக்கி கருவியை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இந்த கேள்விக்கு 500 முறைக்கு மேல் நான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன். தமிழக முதல்வர் அறிவிப்பின்படி இம்மருத்துவமனை கட்டப்பட்டது. முதல்வர், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ. 34 கோடி மதிப்பீட்டில், புற்றுநோய்க்கான அதிநவீன கருவி (Robotic Cancer Equipment) திறந்து வைத்தார்.அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் தினந்தோறும் 400 முதல் 500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுவந்தார்கள், ஆனால், தற்போது 1500 முதல் 2000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். எனவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையானது தலைமைச் செயலகமாக மாற வாய்ப்பு இல்லை" என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via