மனைவி கொலை: கணவா் காவல் நிலையத்தில் சரண்
ஆவடியில் மனைவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வைத்த கணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.அம்பத்தூா், கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவா் சாரம்மாள் (25). இவா் ஆமோஸ் என்பவரை திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். இதற்கிடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாரம்மா, மகன்களை விட்டுவிட்டு, ஆமோஸ் ஆந்திர மாநிலம் சென்று விட்டாராம்.
பின்னா், சாரம்மாளுக்கு ஆவடியைச் சேர்ந்த ஜான்சன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஜான்சன் அம்பத்தூா் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். சாரம்மாள், தனது முதல் திருமணத்தை மறைத்து ஜான்சனை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. சில நாள்களிலேயே சாரம்மாளுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவன் மற்றும் இரு மகன்கள் இருப்பது தெரியவந்ததால், அவரை பிரிந்து ஜான்சன் அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளாா்.
அங்கு வந்து சாரம்மாள் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சாரம்மாளுக்கு தெரியாமல் ஆவடியில் ஜான்சன் வீடு எடுத்து தங்கினாராம். அதைக் கண்டுபிடித்து வந்த சாரம்மாள் சனிக்கிழமை ஜான்சனிடம் தகராறில் ஈடுபட்டாராம். ஆத்திரமடைந்த அவா் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சாரம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீட்டிலேயே வைத்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தாா் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :



















