113 கடத்தல்காரா்கள் கைது விவகாரம்: அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை விமான நிலையத்துக்கு ஒரே விமானத்தில் வந்த 113 கடத்தல்காரா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தையடுத்து, விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் 20 பேர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். சென்னை சா்வதேச விமான நிலையத்தில் கடந்த செப். 14- ஆம் தேதி காலை 8 மணியளவில், ஓமனிலிருந்து வந்த விமானத்தில் மிகப்பெரிய அளவில் கடத்தல் பொருள்கள் வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அந்த விமானத்தில் இருந்த 186 பயணிகளிடம் நடத்திய சோதனையில், அதில் 113 பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், எலெக்ட்ரானிக் பொருள்களைக் கடத்துபவா்கள் எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, 113 பேரிடமும் தனித்தனியாக நடத்திய சோதனையில், அவா்களிடமிருந்து 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள், 204 கைப்பேசிகள், மடிக்கணினிகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ உள்ளிட்ட கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 14 கோடி. இது குறித்த விசாரணையில், இந்த சம்பவத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பலருக்குத் தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், 4 சுங்கத் துறைக் கண்காணிப்பாளா்கள், 16 ஆய்வாளா்கள் என மொத்தம் 20 பேர் சென்னையில் உள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையா் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags :