அ.தி.மு.க. பொன் விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை

by Editor / 16-10-2021 03:40:56pm
அ.தி.மு.க. பொன் விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை

அண்ணா தி.மு.க. பொன் விழாவையொட்டி நாளை சென்னையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்‌ செல்வமும்‌ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பொன் விழாவையொட்டி நேற்று எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்‌ செல்வம்‌ ஆகியோர் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு ‘புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’ என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்கள்.


பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரில் விருதுகள், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசு, கழக முன்னோடிகளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர்.
 கழக பொன் விழாவை யொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அண்ணா தி.மு.க. நிறுவனத்‌ தலைவர்‌, புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அண்ணா தி.மு.க.வைத் தொடங்கி 49 ஆண்டுகள்‌ நிறைவடைந்து, (17 ந் தேதி) - ஞாயிற்றுக்‌கிழமை 50 வது ஆண்டு தொடங்குவதைக்‌ கொண்டாடும்‌ வகையில்‌ அன்று காலை 10 மணிக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்‌ முதலமைச்சருமான ஓ. பன்னீர்‌ செல்வம்‌, இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்‌ முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌ சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம்‌ சாலை, தலைமைக்‌ கழக வளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்; கழக நிரந்தரப்‌ பொதுச்‌ செயலாளர்‌ புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரது உருவச்‌ சிலைகளுக்கு மாலை அணிவித்து, கழகக்‌ கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி, நமது புரட்சித்‌ தலைவி அம்மா நாளிதழ்‌ சார்பில்‌ தயார்‌ செய்யப்பட்டுள்ள கழகத்தின்‌ பொன்விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்கள்‌.
அதனைத்‌ தொடர்ந்து, சென்னை, காமராஜர்‌ சாலையில்‌ உள்ள பேரறிஞர்‌ அண்ணா, கழக நிறுவனத்‌ தலைவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌, புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரது நினைவிடங்களுக்கு நேரில்‌ சென்று, மலர்‌ தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்‌.


இந்நிகழ்ச்சிகளில்‌, தலைமைக்‌ கழக நிர்வாகிகளும்‌, முன்னாள்‌ அமைச்சர்களும்‌, மாவட்டச்‌ செயலாளர்களும்‌, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்‌; முன்னாள்‌ நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்‌; கழகத்தில்‌ பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றியும்‌, சமூக இடைவெளியைக்‌ கடைப்பிடித்தும்‌, முகக்‌ கவசம்‌ அணிந்தும்‌, இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும்‌ பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்‌.
இத்தகவலை அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via