மீனவர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ

by Staff / 19-10-2023 02:08:05pm
மீனவர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (அக். 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம்,  வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி, பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் படை வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது. ஒன்றிய பாஜக அரசு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள்ளே வந்து தாக்குதல் நடத்துவதையும் நமது மீனவர்களை கைது செய்வதையும் தடுக்க முயற்சிக்கவில்லை. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்து அவர்களின் ஐந்து படகுகளையும் இலங்கை கடற்படை பறித்துச் சென்றுள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பாஜக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் விடுதலை செய்து மீன்பிடி படகுகளை திரும்பப் பெறவும் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via