மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் 10 சவரன் நகை கொள்ளை!

மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகர் கண்ணம்மா பேட்டை எஸ்.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா. இவரது கணவர் தியாகராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக சுலோச்சனா வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சுலோச்சனா நேற்று மாலை பாண்டிபஜார் பகுதியில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலுக்கு சென்று திரும்பும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் சுலோச்சனாவிடம் அறிமுகமாகி பேச்சு கொடுத்துள்ளனர்.
பின்னர் நேற்று இந்த இடத்தில் கொலை நடந்ததாக பயமுறுத்தி நகைகளை கழட்டி பைக்குள் போட்டு செல்லுமாறு மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய சுலோச்சனா தான் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை கழட்டி பைக்குள் போட்டுள்ளார்.
பின்பு தி.நகர் போலீஸ் பூத் அருகே தேநீர் அருந்திவிட்டு பணம் எடுக்கும்போது மடித்துவைத்த நகையை பார்க்கும் போது காணாமல் போயிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுலோச்சனா கவனத்தை திருப்பி மர்ம நபர்கள் சிலர் நகையை திருடி சென்றுவிட்டதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :