மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலி பணி நியமன ஆணை ஐந்து பேர் கைது.
விருதுநகர் நகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலாண்மறைநாடு கிராமத்தைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) ஓய்வு பெற்ற அதிகாரி குருசாமி. இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) வேலை வாங்கி தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு ஏஜெண்டுகளாக குருசாமியின் மகன்கள் இமானுவேல், மோகன் தாஸ், விளாம்பட்டியை சேர்ந்த கார்த்திக் மற்றும் கணேசன் ஆகியோர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 40க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 2 கோடி ரூபாய் பெற்றதாக தெரிகிறது.
இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு குஜராத் கேரளா மாநிலம் மற்றும் சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையங்களில் பணி வழங்கப்பட்டுள்ளதாக பணி நியமித்திற்கான ஆணைகளை வழங்கி உள்ளார்.
அதனைப் பெற்றுக் கொண்ட பின்னர் இளைஞர்கள் அங்கு சென்று பார்த்த போது தான் தங்களுக்கு வழங்கப்பட்டது போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் குருசாமிடம் கேட்ட போது, சரியாக பதில் கூறாமல் , பணத்தையும் தர முடியாது என்று கூறியது மட்டுமின்றி, பணம் கேட்டு சென்றவர்களிடம் குருசாமி மற்றும் அவரது மகன்கள் தகராறு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம்,, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி காவல் நிலையம் ஆகிய இடங்களில் புகார் அளித்தது மட்டுமின்றி, தமிழக முதல்வர் தனி பிரிவிற்கும் தங்களது புகாரை அனுப்பி வைத்திருந்தனர்.
இப்ப பிரச்சனை தொடர்பாக மாரனேரி காவல் நிலையத்தில் கிச்சாநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி குருசாமி,குருசாமியின் மகன்கள் இமானுவேல், மோகன் தாஸ், விளாம்பட்டியை சேர்ந்த கார்த்திக் மற்றும் கணேசன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக குருசாமியின் மகன்கள் இமானுவேல், மோகன் தாஸ், விளாம்பட்டியை சேர்ந்த கார்த்திக் மற்றும் கணேசன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த குருசாமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் குருசாமி சுற்றி திரிந்து கொண்டிருப்பதை பார்த்த அவரிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், குருசாமியை சுற்றி வளைத்தது மட்டுமின்றி தங்களது பணத்தைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
வெள்ளை பேப்பர் தாங்கள் எப்போது பணம் கொடுப்பேன் என்று எழுதி தருகிறேன் என்று குருசாமி கூற, அதனை ஏற்க மறுத்தவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்கள் பிடித்து வைத்திருந்த குருசாமி மீட்டு,, மாரனேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மாரனேரி போலீசார் குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) ஓய்வு பெற்ற அதிகாரியை, அவரால் பாதிக்கப்பட்டவர்களை சுற்றி வளைத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலி பணி நியமன ஆணை ஐந்து பேர் கைது.