மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...
சென்னையில், மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கபபட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா. கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதியன்று ராஜா அண்ணாமலைப்புரத்தில் கூலி படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 10 பேரை கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கைதான 10 பேரில் ஐயப்பன் என்பவர் சரணடைந்த நிலையில், மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்துள்ளது.
தண்டனை விவரம் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என கூறி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கபபட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினையில், கூலிப்படையினர் மூலம் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில், மக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நடந்த இந்த கொடூர கொலை, அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதன்மூலம், கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :