கன்னியாகுமரியில் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகு
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று விசை படகுகள் எதுவும் கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்ததுறை முகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன.
இத்துறைமுகத்தில் இருந்து விசைபடகுகள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று விட்டு இரவில் கரை திரும்பி விடவேண்டும். அதன்படி கன்னியாகுமரி ஐகிரவுண்டு பகுதியை சேர்ந்த சகாய ஆன்றனி (வயது 55) என்பவருக்கு சொந்தமான விசைபடகில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு இரவில் கரை திரும்பி கொண்டிருந்தனர். அவர்களின் படகு கூடங்குளம் கடல் பகுதியில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தது.
நடுக்கடலில் வந்து கொண்டிருந்தபோது படகில் திடீரென சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் அந்த படகின் என்ஜின் அறையில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ படகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் 14 பேரும் படகில் இருந்து உயிர்பிழைக்க கடலில் குதித்தனர். அங்கிருந்து நீந்தி கரைக்கு வர முயற்சித்தனர்.
இதற்கிடையே நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிவதை மீன்பிடிக்க சென்ற மற்ற விசை படகு மீனவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனே அங்கு விரைந்து சென்று படகில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் படகு முற்றிலும் எரிந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து கடலில் குதித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 14 மீனவர்களையும் படகில் சென்றவர்கள் மீட்டு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று விசை படகுகள் எதுவும் கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி கடலில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்த காட்சிகளை சிலர் கரையில் இருந்து செல்போனில் படம் பிடித்தனர். அந்த காட்சிகளில் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
Tags :