பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசு  பதிலளிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்

by Editor / 05-08-2021 03:54:16pm
 பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசு  பதிலளிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்



பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரால் முடக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர் என்.ராம், வழக்கறிஞர் எம்.எல் சர்மா உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. 


விசாரணையில்,  “தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகார குற்றச்சாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வழக்கை தொடுத்துள்ளவர்களுக்கு இது தொடர்பாக கூடுதல் தகவல் தெரியும். அந்த கூடுதல் தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும். இந்த வழக்கை தொடுத்திருக்கிறவர்கள் பலர் இதனால் பாதிக்கப்படவில்லை என்றாலும் அவர்களுடைய தொலைபேசியும் ஒட்டிக்கேட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருந்தால் அவர்கள் கிரிமினல் வழக்கு தொடர்ந்திருந்திருக்கலாம். 2019ம் ஆண்டு இந்த விவகாரம் வெளி வந்ததாக தகவல்கள் இருக்கின்றது. அப்படியிருக்கும் பொழுது தற்பொழுது இந்த விவகாரத்தை மிக அவசரமாக கையாள வேண்டிய சூழல் என்ன ? அதுமட்டுமில்லாமல் உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த விதமான புகார்களையும் அளிக்கவில்லை?” என தலைமை நீதிபதி தலைமை கேள்வியெழுப்பியுள்ளார்.


இதனை தொடர்ந்து, “பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் தன்மை குறித்து ஆராய வேண்டியுள்ளது. அதன் பிறகுதான் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உள்நுழைய முடியும்.” என நீதிபதி கூறியுள்ளார்.
இந்நிலையில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பெகாசஸ் தொழில்நுட்பம் ஊறு விளைவிக்கக்கூடியது, சட்டவிரோதமானது, நமக்கு தெரியாமலேயே நமது சொந்த வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உளவு பார்க்க கூடியது. இது அடிப்படை உரிமைகள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் தனது வாதத்தை முன்வைத்தார். 


மேலும், NSO நிறுவனம் உளவு பார்க்க கூடிய தகவல்களை ஒரு நாட்டின் அரசுகளுக்கு மட்டுமே வழங்கும். அப்படி இருக்கும் பொழுது மத்திய அரசு இதை விலை கொடுத்து வாங்கியது அல்லது இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட இருக்கிறதா ? என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும், ஏனென்றால் இது போன்ற நிகழ்வுகள் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்றும் வாதிட்டார்.


மனுதாரரின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி, “பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் உண்மை என்ன என்பது வெளி வந்தாக வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான ரிட் மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.


பெகாசஸ் விவகாரத்தில், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமெரிக்காவில் இதே போல உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் குறித்த விவரங்களை தலைமை நீதிபதியிடம் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via