நள்ளிரவில் பறந்த ட்ரோன் - மூவர் கைது
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ராம சீனிவாசனை ஆதரித்து பழங்காநத்தம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.பிறகு இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக இங்கு மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. மத்திய உள்துறை அமைச்சா் பங்கேற்பாா் என அறிவிக்கப்பட்டிருந்ததால் மேடை அமைக்கும் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்த நிலையில், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மேடை அருகே ட்ரோன் ஒன்று பறந்து வந்தது. மேலும் மேடையைச் சுற்றி அது பறந்ததால் அதிா்ச்சியடைந்த பாஜகவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்தனர்.விசாரணையில், ட்ரோனை இயக்கியது விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த சத்தியநாராயணன், மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த நவீன்குமாா், அதே பகுதியைச் சேர்ந்த இஜாஸ் ஆகியோா் என்பதும், பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த குறும்பட போட்டிக்காக ட்ரோன் மூலம் படம் எடுத்ததும் தெரியவந்தது. மேலும் இதை இயக்குவதற்கு சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே அனுமதி கோரிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் நள்ளிரவில் ட்ரோன் மூலம் படம் எடுத்தது தெரியவந்தது.இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Tags :