கோவில்பட்டியில் பக்கெட் கடலை மிட்டாய் விற்பனை தொடக்க விழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக மிக முக்கியத் தொழிலாக விளங்குவது கடலை மிட்டாய் உற்பத்தி. கரிசல் மண்ணில் உற்பத்தி செய்யப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு என்று தனிச்சிறப்பு உண்டு. கடந்த 2020 ஆம் ஆண்டு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றது தொடர்ந்து கடலை மிட்டாய் உற்பத்தி தொழில் மிகுந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. கடலை மிட்டாயில் சுமார் 20 வகையான கடலை மிட்டாய் வகைகளை உற்பத்தியாளர்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை இன்றைக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை என்பது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மற்றொரு பரிமாணமாக பக்கெட் பிரியாணி போல பக்கெட் கடலை மிட்டாய் தற்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் உள்ள ஆசியா கேண்டி என்ற நிறுவனம் ஒரு கிலோ எடை கொண்ட பக்கெட் கடலை மிட்டாய் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது. தொழிலதிபர் ரவி மாணிக்கம் மற்றும் பொறியாளர் சம்பத் ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
இன்று முதல் பக்கெட் கடலை மிட்டாய் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அழகிய பிளாஸ்டிக் டப்பாவில் அனைவரையும் கவரும் வகையில் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கடலை மிட்டாய் காலியான பின்னர் அந்த பிளாஸ்டிக் டப்பாவை வேறு ஒரு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் வகையிலும் அமைத்துள்ளனர். ஒரு கிலோ பாக்கெட் கடலை மிட்டாய் விலை ரூ.299ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பக்கெட் கடலை மிட்டாய் வாங்கிய வாடிக்கையாளர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் என்பவர் கூறுகையில் கடலை மிட்டாய் என்பது உடலுக்கு மிகவும் சத்துள்ளது, கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னுடைய குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் கொடுத்து வருவதாகவும், இன்றைக்கு கடலை மிட்டாயில் பல்வேறு வகையான கடலை மிட்டாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பக்கெட் பிரியாணி பக்கெட் சிக்கன் போல இன்றைக்கு பக்கெட் கடலை மிட்டாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியது. அந்தப் பக்கத்தின் தோற்றம் மிக அழகாக இருப்பது மட்டுமின்றி, கிப்ட் கொடுப்பதற்கு உகந்ததாக உள்ளதாக கூறினார்
Tags :