ஆடம்பர உணவு வேண்டாம் தலைமை செயலாளர் இறையன்பு 

by Editor / 10-06-2021 04:42:58pm
 ஆடம்பர உணவு வேண்டாம்  தலைமை செயலாளர் இறையன்பு 

 

 

ஆய்விற்காக மாவட்டங்களுக்கு வரும்போது இரண்டு வகை காய்கறிகளுடன் எளிமையான உணவு போதும், ஆடம்பரமான உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தலைமை செயலாளராக பொறுப்பேற்ற இறையன்பு வெளியிடும் அறிக்கை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. முதலில், தன்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். இவ்வாறு மாவட்டங்களுக்கு ஆய்வுக்காகவோ அல்லது சுற்றுப்பயணமாகவோ தலைமை செயலாளர் செல்லும்போது, அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஆய்விற்காக மாவட்டங்களுக்கு செல்லும்போது காலை மற்றும் இரவு வேளையில் எளிமையான உணவும், மதியம் சைவ உணவு மட்டுமே ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் அதிகபட்சமாக இரண்டு காய்கறி கூட்டு, பொறியல்கள் இருந்தாலே போதுமானது. ஆடம்பரமான உணவு ஏற்பாடுகளை தவிர்க்க வேண்டும்என தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் .

 

Tags :

Share via