சென்னைக்கு லாரிகளில் கடத்தப்பட்ட கூழாங்கற்கள்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த பிடாகம் மேம்பாலம் அருகே, விழுப்புரம் புவி மற்றும் சுரங்கத்துறையின் தனி வருவாய் ஆய்வாளர் குமரன் தலைமையிலான அதிகாரிகள் 20-ம் தேதி மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த இரண்டு கனரக லாரிகளை நிறுத்தி, அந்த அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், உரிய அரசு அனுமதியின்றி கூழாங்கற்களை கடத்திச் சென்றது தெரிய வந்திருக்கிறது.இதனையடுத்து, புவி மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் இரு லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, உளுந்தூர்பேட்டை சேந்தநாடு கிராமத்திலிருந்து சென்னை பகுதிக்கு கூழாங்கற்களை கடத்தியது தெரிய வந்துள்ளது. எனவே, சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூழாங்கற்களை அதிகாரிகள் லாரிகளுடன் பறிமுதல் செய்தனர்.இது குறித்து, நேற்றைய தினம் (21. 04. 2023) விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்த சுரங்கத்துறையின் தனி வருவாய் ஆய்வாளர் குமரன், கூழாங்கற்களுடன் கூடிய லாரிகளையும் போலீஸிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து 379 உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :