29 வடமாநில சிறுவர்கள் மீட்பு
சென்னை மண்ணடி, மலையப்பன் தெருவில் சட்டவிரோதமாக பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அந்நிறுவனத்தில் வடமாநில சிறுவர்கள் பலர் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அரசு தொழிலாளர் துறையின் மூலம், முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையர், இணை ஆணையர், புரசைவாக்கம் தாலுகா தாசில்தார், குழந்தைகள் உதவி மையத்தின் அதிகாரிகள் ஆகியோர் முத்தியால்பேட்டை போலீஸாருடன் இணைந்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கண்காணித்தபோது பை தயாரிக்கும் நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்நிறுவனத்தில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த 10 வயது முதல் 17 வயது வரை உள்ள 29 சிறுவர்கள், அடைத்து வைக்கப்பட்டு பைதயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அச்சிறுவர்கள் மீட்கப்பட்டு, ராயபுரத்திலுள்ள அரசுகுழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்
Tags :