விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

by Staff / 22-04-2023 01:16:35pm
விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்களும், தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் உள்நாட்டு போக்குவரத்துக்கான விமான நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த விமான நிலையங்கள் மூலம் தினமும் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகின்றனர். கார்களில் செல்வதை காட்டிலும் மக்கள் விமானங்களில் வேகமாக சென்று வருகின்றனர்.
மேலும் ரம்ஜான் பண்டிகை மற்றும் கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் பிற இடங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது திடீரென்று விமான டிக்கெட்டுகளின் கட்டணம் சுமார் 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற இடங்களுக்கும் செல்லவும், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான டிக்கெட் கட்டணம் கிடுகிவென உயர்ந்துள்ளன. அதாவது வழக்கமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான பயணம் செய்தால் டிக்கெட் கட்டணமாக ரூ. 3, 675 என்ற அளவில் இருக்கும். தற்போது இந்த கட்டணம் ரூ. 11 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
அதேபோல் சென்னை-திருச்சி விமான கட்டணம் ரூ. 2, 769 என இருந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. மேலும் சென்னை-கோவை இடையேயான விமானத நிலையத்தின் வழக்கமான கட்டணம் ரூ. 3, 313 என்ற அளவில் இருந்தது. தற்போது ரூ. 5, 500 முதல் ரூ. 11 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

அதோடு சென்னையில் இருந்து மதுரை விமான கட்டணம் வழக்கமாக ரூ. 3, 419 என்ற அளவில் இருந்தது. இது தற்போது ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுதவிர சென்னை-டெல்லி இடையேயான விமான கட்டணம் வழக்கமாக ரூ. 4, 973 என இருக்கும். தற்போது இந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ. 8, 5000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.இந்த விலையேற்றத்தால் விமான பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். திடீர் டிக்கெட் விலை உயர்வால் மக்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது. இருப்பினும் திட்டமிட்ட பயணங்களை தவிர்க்க முடியாததால் விமானங்களில் கூடுதலாக டிக்கெட் கட்டணங்கள் வழங்கி மக்கள் பயணித்து வருகின்றனர்.மேலும் தற்போது ரம்ஜான், கோடை விடுமுறையையொட்டி அதிகமானவர்கள் விமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் தான் வழக்கமான கட்டணத்தை விட விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tags :

Share via