முகம் சிதைந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு...
நெல்லை அருகே காட்டுப்பகுதியில் முகம் சிதைந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த சாந்தி நகர் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீசார், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்டவர் யார் கொலை செய்தவர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மனக்காவலம் பிள்ளை நகரைச் சேர்ந்த டேவிட் என்பதும் மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது
மேலும் இவர் ஆனந்த்ராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. எனவே ஆனந்த்ராஜ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக தான் டேவிட் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பாளையங்கோட்டை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
Tags :