சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

by Editor / 23-05-2024 09:41:06am
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா கடந்த ஆண்டு மே 28ம் தேதி பொறுப்பேற்றார். 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் 2010ல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ரிட் மற்றும் கடன் தீர்ப்பாய வழக்குகளில் மிகுந்த நிபுணத்துவம் பெற்ற இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த ஓராண்டாக தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா வரும் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட உள்ளது.இந்த நிலையில், தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதையடுத்து மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். 

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவை அடுத்து, நாளை மறுநாள் முதல் தலைமை நீதிபதி தொடர்பான பணிகளை நீதிபதி ஆர்.மகாதேவன் கவனிப்பார். 1963 ஜூன் மாதம் சென்னையில் பிறந்த நீதிபதி மகாதேவன், 1989-ல் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிவில், கிரிமினல் வழக்குகளில் அனுபவம் உள்ள நீதிபதி மகாதேவன்,ஒன்றிய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2013-ம் ஆண்டு ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags : சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

Share via