பக்ரீத் திருநாள்-வைகோ வாழ்த்து

by Editor / 16-06-2024 10:16:31am
பக்ரீத் திருநாள்-வைகோ வாழ்த்து

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது.இதனையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்து வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காகத் தங்களையே தியாகம் செய்து கொள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளும் பண்டிகையாக பக்ரீத் திருநாள் இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது.

அரபி மாதங்களில் கடைசி மாதமான துல்ஹஜ் பத்தாம் நாளில் தங்களின் புனிதக் கடமையை (ஹஜ்) நிறைவேற்றிவிட்டு இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் தனது மகனையும் இறைவனுக்காக அறுத்துப் பலியிட முன்வந்த தியாகத்தைப் போற்றுகின்ற வகையில் உலக முஸ்லிம்கள் தங்களது குர்பானியை நிறைவேற்றிவிட்டு, தியாகத்தைப் போற்றிடும் தியாகப் பெருநாள் பக்ரீத்.

நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

வாழையடி வாழை என உறவு முறையுடன் வாழும் மரபைப் பேணி, மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் பக்ரீத் பண்டிகை நன்னாளில்  அனைவரும் உறுதிகொள்வோம்.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயமார்ந்த பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : பக்ரீத் திருநாள்-வைகோ வாழ்த்து

Share via