நீதிமன்றத்தில் ஆஜரான சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன் 

by Editor / 09-08-2021 04:32:52pm
 நீதிமன்றத்தில் ஆஜரான சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன் 




பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது, அந்த பெண் எஸ்.பி.யை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.


இவ்விவகாரம் குறித்து அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போதைய தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்த கண்ணன் ஆகிய இருவர் மீதும் சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதற்கிடையே கடந்த ஏப்ரல் 23 ந்தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.


இந்நிலையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் கடந்த ஜூலை 29ந்தேதி விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்ககள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.இந்நிலையில் இவ்வழக்குவிசாரணைக்கு வருவதையடுத்து சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராக வேண்டுமென்று நடுவர் மன்றம் நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.


இதையடுத்து  விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜரா னார். இவ்வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனும் ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன் வழங்கியது.

 

Tags :

Share via