தேசிய பெண் போலீஸாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன்!

by Editor / 21-06-2024 05:39:52pm
தேசிய பெண் போலீஸாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன்!

சென்னை: தமிழக காவல் பணியில் பெண்கள் முதன்முதலாக கடந்த 1973-ல் சேர்க்கப்பட்டனர். இதன் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய அளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டி, தமிழக காவல் துறை சார்பில் நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் இப்போட்டி கடந்த 15-ம் தேதி முதல் நேற்று வரை (20-ம் தேதி) நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் 13 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. காவல் துறை அமைப்புகள், மத்திய ஆயுதப் படைகளின் 30 அணிகளைச் சேர்ந்த 8 உயர் அதிகாரிகள் உட்பட 454 பெண் போலீஸார் இதில் பங்கேற்றனர். போட்டியை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கலந்துகொண்டு, பெண் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இப்போட்டியின் சிறப்பு விழா மலரையும் வெளியிட்டார். அகில இந்திய பெண் போலீஸாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக பெண் போலீஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்கான கோப்பையை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவிடம் இருந்து பெண் போலீஸார் ராமலட்சுமி, சோபியா லாரன், பிரியா, செல்லமயில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஒட்டுமொத்த கோப்பைக்கான 2-வது இடத்தை எல்லை பாதுகாப்புப் படை பெண்கள் அணி பெற்றது.

மாநிலங்களுக்கு இடையில் சிறந்த அணிக்கான சாம்பியன் கோப்பையையும் தமிழக பெண்கள் அணி கைப்பற்றியது. உதவி ஆய்வாளர் சுதா, பெண் போலீஸார் சியாமளா, ராதிகா, ராஜேஸ்வரி ஆகியோர் இந்த கோப்பையை பெற்றுக் கொண்டனர். இந்தப் பிரிவில் 2-வது இடத்தை அசாம் அணி பிடித்தது.

தமிழ்நாடு பெண்கள் அணிக்கு `ரைப்பிள்’ பிரிவில் சிறந்த அணிக்கான கோப்பையும் கிடைத்தது. இதை பெண் போலீஸ் ரூபாவதி பெற்றார். `கார்பைன்’ பிரிவிலும் சிறந்த அணி கோப்பையையும் தமிழ்நாடு பெண் போலீஸ் தட்டிச் சென்றது. இந்த கோப்பையை பெண் காவலர்கள் கீதா, சுசி ஆகியோர் பெற்றனர். `ரிவால்வர்’ பிரிவில் 2-வது இடத்தை தமிழ்நாடு பெண் போலீஸ் அணி பெற்றது. `ரிவால்வர்’ பிரிவில் எல்லை பாதுகாப்புப் படை பெண் வீராங்கனைபரிமளாவும், `கார்பைன்’ பிரிவில் தமிழ்நாடு அணியைச் சேர்ந்த பெண் போலீஸ் கீதாவும் பதக்கங்கள் பெற்றனர்.

விழாவில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வரவேற்று பேசினார். பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாக தேவி நன்றி கூறினார்.

 

Tags : தேசிய பெண் போலீஸாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன்!

Share via