41 கல்லூரிகளில் பணியாற்றுவோர் சம்பளத்தை அரசே வழங்க வேண்டும்- ராமதாஸ்

by Admin / 12-08-2021 04:46:27pm
41 கல்லூரிகளில் பணியாற்றுவோர் சம்பளத்தை அரசே வழங்க வேண்டும்- ராமதாஸ்

பல்கலைக் கழகங்களின் எதிர்காலம் கருதி அவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடிக்கும் கூடுதலான நிலுவையையும் அரசு விரைந்து வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றுவோரின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணை பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. பல்கலைக்கழகங்களிடம் நிதி இல்லாத சூழலில், 41 அரசு கல்லூரிகளின் பணியாளர்களுக்கு இனி ஊதியம் கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் ஊதியச் சுமையை ஏற்றுக்கொள்ள அவை தயாராக இல்லை. தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தான் அதிகபட்சமாக 10 உறுப்புக்கல்லூரிகளை நடத்தி வந்தது.

அவை அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், இப்போது அக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமானால் மாதத்திற்கு ரூ.1.51 கோடி தேவைப்படும். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் ரூ.8.93 கோடி தேவைப்படும்.

ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருப்பு உள்ள தொகை ரூ.6.52 கோடி மட்டும் தான். அதனால் 10 அரசு கல்லூரிகளின் பணியாளர்களுக்கு தங்களால் ஊதியம் வழங்க முடியாது என பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாகவே கடிதம் எழுதிவிட்டார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுத்துள்ள அதே நிலைப்பாட்டைத் தான் மற்ற பல்கலைக்கழகங்களும் எடுத்துள்ளன. அவற்றின் நிலைப்பாடும் சரியானது தான். ஆனால், இந்த நிலைப்பாடு காரணமாக 41 அரசு கல்லூரிகளின் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் கிடைக்குமா? என்பது ஐயம் தான்.

சில பல்கலைகளில் ஓய்வுபெறும் பேராசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்களை வழங்குவதற்குக் கூட நிதி இல்லை. இத்தகைய சூழலில் 41 அரசுக்கல்லூரிகளின் ஊதிய செலவையும் பல்கலைக் கழகங்களின் மீது சுமத்தினால், அவை எதிர்பார்த்ததை விட இன்னும் வேகமாக திவாலாகிவிடக் கூடும். அதற்கு அரசே காரணமாக இருக்கக்கூடாது.

எனவே, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு நிர்வாகத்திற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் ஊதியத்திற்கான செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமின்றி, பல்கலைக் கழகங்களின் எதிர்காலம் கருதி அவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடிக்கும் கூடுதலான நிலுவையையும் அரசு விரைந்து வழங்க வேண்டும்

 

Tags :

Share via