43வது முறையாக மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது

by Editor / 31-07-2024 12:17:14am
 43வது முறையாக மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.  இதனால், அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.  இதனால், அந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படுகிறது.  இதனால், தமிழ்நாட்டின் மேட்டூர் அணையின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து,  அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த நிலையில், 43வது முறையாக மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.  மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நீர் வரத்து, விநாடிக்கு 66,454 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து, நீர் திறப்பு 81,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டு வரலாற்றில் மேட்டூர் அணை இதுவரை 71 முறை 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளநிலையில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை பொறுத்தும் உபரி நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், நீர்நிலைகள் அருகில் யாரும் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

Tags : 43வது முறையாக மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது

Share via