இங்கிலாந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஆப்கானிஸ்தான் செல்லும் இங்கிலாந்து படை

by Admin / 13-08-2021 01:32:09pm
இங்கிலாந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஆப்கானிஸ்தான் செல்லும் இங்கிலாந்து படை

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் 630 கைதிகள், நிம்ரோஜ் மாகாணத்தில் 350 கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தலிபான்கள் விடுவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத சூழலில், அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவில் அதிபர் ஜோ பைடன் உள்ளார். அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன. எஞ்சிய படைகளும் இம்மாத இறுதிக்குள் திரும்ப பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த சூழலில் அமெரிக்க படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர். சமீப நாட்களில் அவர்கள் கைப்பற்றி உள்ள 6 முக்கிய நகரங்களில் இருக்கும் சிறை கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளனர்.  அவர்களில் பலர் போதை பொருள் கும்பலைச் சேர்ந்தோர், கடத்தல்காரர்கள் மற்றும் ஆயுத கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.
 
ஆப்கானிஸ்தானில் இத்தகைய சூழல் நிலவி வரும் நிலையில், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து விரைவில் வெளியேறுமாறு கடந்த வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியிருந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த 4,000 பேர் ஆப்கானிஸ்தானில் தற்போது இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் அங்கிருந்து இருந்து பாதுகாப்பாக வெளியேற உதவி செய்யும் வகையில் இங்கிலாந்து படையைச் சேர்ந்த 600 ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் பென் வாலெஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து மக்கள் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் ஆப்கான் அலுவலர்கள் ஆகியோரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது தான் தற்போதைய முதல் கடமை. அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via