மாடுகளைத் திருடி விற்பனை செய்த 4 பேர் கைது

செங்கம், புதுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து மாடுகள் திருடு போவது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், நஸ்ரூதீன், முருகன் உள்ளிட்ட போலீஸார் மாடு திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் 7 பேரை செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடந்த இரண்டு தினங்களாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (50), பிரசாந்த் (52), கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (54), மங்கலம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (49) ஆகிய நான்கு பேர் கூட்டாகச் சேர்ந்து இரவு நேரத்தில் மாடுகளைத் திருடி இறைச்சிக் கடைகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தது. தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, மாடுகளைத் திருடி விற்பனைக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்திய இரண்டு மினி லாரிகளை செங்கம் போலீஸார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், இவர்களுடன் மாடு திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : மாடுகளைத் திருடி விற்பனை செய்த 4 பேர் கைது