வனத்துறையினர் உடைத்த சாலை மீண்டும் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் 11 பஞ்சாயத்துகளும், 269 மலை குக் கிராமங்களும் உள்ளது. இங்கு வாழும் மலைவாழ் மக்கள் சாமை தினை வரகு குதிரைவாலி உள்ளிட்ட நெல் ரகங்களை பயிர் செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பலாப்பழம் சீதாப்பழம் குச்சி வெள்ளி கிழங்கு தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளையும் பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு மலை குக் கிராமங்களுக்கு செல்ல தார் சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்து வருகின்றனர். குறிப்பாக கள்ளகொள்ளை முதல் சாராமரத்தூர் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மலைவாழ் மக்கள் விடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாதிரி மலை கிராமம் முதல் பெரியவேலி மலை கிராமம் வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை மற்றும் அதனுடன் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோரப்பப்பட்டு 1 கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்று கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணியில் இரண்டு கிலோமீட்டர் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடமாகவும், ஒரு கிலோமீட்டர் வனத்துறைக்கு சொந்தமான இடமாக இருந்துள்ளது. சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெற கோப்புகள் தயார் செய்து மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த தகவல் தெரியாமல் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் பெரியவேலி என்ற இடத்தில் 20 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலையை அமைத்துள்ளார். சாலை அமைத்துள்ளதாக ஜவ்வாது மலை வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி வாகனத்தின் மூலம் சிமெண்ட் சாலையை இடித்து உடைத்தனர். இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
உடனடியாக இடத்த சாலையை சீர் செய்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்தனர். தற்போது மழை காலம் என்பதால் மலை கிராமத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என்று மலைவாழ் கேட்டுக்ககொண்டனர்.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொலிரோ காரில் குண்டும் குழியுமான மலை கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வனத்துறையினரிடம் அனுமதி பெரும் முன்னரே ஒப்பந்ததாரர் சாலையை அமைத்ததால் வனத்துறை இந்த இடத்தை இடித்தனர் எனவும், கடந்த மாதம் 23ம் தேதி வனத்துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், தற்போது சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஜவ்வாது மலையில் உள்ள மலை குக் கிராமங்களில் எங்கெல்லாம் சாலை வசதி இல்லாமல் இருக்கின்றது என ஆய்வு செய்து உடனடியாக சாலை அமைத்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேட்டி அளித்தார்.
Tags : வனத்துறையினர் உடைத்த சாலை மீண்டும் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.