சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு
கந்தசஷ்டி விரதம் :
கிழமைகளில் செவ்வாய்கிழமை, திதிகளில் சஷ்டி, நட்சத்திரங்களில் கார்த்திகையில் முருகனுக்கு விரதம் இருப்பது விசேஷம்.மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், முருகனுக்குரிய விரத நாட்கள் வந்தாலும், ஐப்பாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை துவங்கி, சஷ்டி வரையிலான ஆறு நாட்களும் மகாகந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆறு நாட்களும் முருக பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து, கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட முருகனுக்குரிய மந்திரங்கள், பாடல்கள் ஆகியவற்றை பாடி விரதம் இருப்பார்கள். முருகப் பெருமான், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்விற்கு பிறகு பக்தர்கள் தங்களின் விரதத்தை நிறைவு செய்வது வழக்கம்.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா :
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பக்தர்கள் அதிகம் கூடுவதும், கந்தசஷ்டி விழா முக்கியமாக நடைபெறுவதும் சூரனை முருகன் வதம் செய்த திருச்செந்தூர் தலத்தில் தான். இங்கு நடக்கும் சூரசம்ஹார விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதைத் தொடர்ந்து மறுநாள் முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் தலத்திலேயே தங்கி இருந்து கந்தசஷ்டி விரதம் இருப்பது வழக்கம்.
கந்தசஷ்டி விரதம் 2024 :
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் 02 ம் தேதி துவங்க உள்ளது. நவம்பர் 07ம் தேதி வியாழக்கிழமை அன்று, விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக முருகப் பெருமான் அவதரித்த விசாகம் நட்சத்திரம் வரும் நாளிலேயே கந்தசஷ்டி எனப்படும் மகாகந்தசஷ்டி விழா துவங்க உள்ளது கூடுதல் சிறப்பானதாகும். அதே போல் திருச்செந்தூர் என்பது குருவிற்குரிய தலமாகும். குருவிற்கு உரிய வியாழக்கிழமையில் சூரசம்ஹாரம் நிகழ உள்ளது. அதோடு சமீப காலமாக முருகனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் திருச்செந்தூரில் அதிகம் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாரெல்லாம் சஷ்டி விரதம் இருக்கலாம்?
பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் தான் சஷ்டி விரதம் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் மட்டுமல்ல, வேலை, திருமணம்,கடன், பொருளாதார நெருக்கடி என எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும், எப்படிப்பட்ட மோசமான நிலையி்ல வாழ்க்கை இருந்தாலும் அது மாற வேண்டும் என்பதற்காக சஷ்டி விரதம் இருக்கலாம். அனைத்தையும் விட மிக முக்கியமாக முருகப் பெருமானின் முழு அருளையும் பெற வேண்டும் என நினைக்கும் முருக பக்தர்கள் யாராக இருந்தாலும் சஷ்டி விரதம் இருக்கலாம். அதே சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள், நீண்ட கால நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உபவாசமாக இருப்பதை தவிர்த்து, முருகப் பெருமானை மனதார நினைத்து விரதம் இருப்பது சிறப்பானதாக இருக்கும்.
Tags :