பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது -மாவட்ட வன அதிகாரி தகவல்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பழைய குற்றால அருவியானது யாருக்கு சொந்தம் என்கின்ற பிரச்சனை பொதுப்பணி துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு இடையே எழுந்த நிலையில், பழைய குற்றாலம் அருவி உள்ள பகுதி வன எல்லைப் பகுதிக்கு உட்பட்டு வருவதால் பழைய குற்றால அருவியானது வனத்துறைக்கு சொந்தம் என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது வனத்துறையினர் ஆஜராகி தங்களது விளக்கங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரே முடிவெடுக்கலாம் என தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான கிருஷ்ண முரளி மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய இருவரும் பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இந்த நிலையில், அவர்கள் கோரிக்கை தொடர்பான மனுவினை மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட வன அதிகாரிக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த மனு தொடர்பாக தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வனப்பகுதிகள் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது எனவும் தற்போது இருந்த நடைமுறையே தொடரும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மனுதாரருக்கு பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தற்போது வனத்துறையினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :