பிரான்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த தேனியைச் சேர்ந்த மாப்பிள்ளை

by Editor / 28-10-2024 10:03:11am
பிரான்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த தேனியைச் சேர்ந்த மாப்பிள்ளை

தேனி மாவட்டம், முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த போஜன், காளியம்மாள் தம்பதியின் மகன் கலைராஜன்.  கலைராஜன் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு கலைராஜனுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியம் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, காதல் மலர்ந்துள்ளது.

பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் பிரான்ஸ் நாட்டில் கடந்த மே மாதம் பெண் வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இருப்பினும், கலைராஜன் தனது சொந்த ஊரில் உறவினர்கள் மத்தியில் தமிழர் கலாச்ச்சாரப்படி , தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையொட்டி இந்தியாவுக்கு திரும்பிய அவர் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கினார்.

இதனையடுத்து, தேனி அருகே உள்ள வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இருவருக்கும் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் மணமகனின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி மரியத்தின் உறவினர்களான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

Tags : பிரான்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த தேனியைச் சேர்ந்த மாப்பிள்ளை

Share via