இந்தியாவில் மனித மோதல் காரணமாக யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம்

by Editor / 19-11-2024 11:48:36pm
இந்தியாவில் மனித மோதல் காரணமாக யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் தற்போது 29 ஆயிரம் யானைகள் இருக்கின்றன.இவற்றில் 10 சதவீதம், அதாவது சுமார் 3,000 யானைகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, முண்டன்துறை, முதுமலை, நீலகிரி, சத்தியமங்கலம், மேட்டூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் யானைகள், அவ்வப்போது வனத்தை ஒட்டிய கிராமங்களுக்கு வந்து விடுகின்றன. இதனால், மனித மோதல் ஏற்படுகிறது.கடந்த 12 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் யானைகள் தாக்கி சுமார் 200 பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல், மனிதர்களால் சுமார் 220 யானைகள் இறந்திருக்கின்றன. இவற்றில் கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 12 ஆண்டில், 147 மனிதர்களும், 176 யானைகளும் பலியாகியுள்ளன. இதில், மனித மோதலால் 109 யானைகளும், இயற்கையாகவும், பிற காரணங்களாலும் 67 யானைகள் உயிரிழந்துள்ளன.

நாடு முழுவதும் யானைகளின் இறப்பை கணக்கிடும்போது, தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு என்பது கட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது மொத்தமுள்ள 3000 யானைகளில் 2 முதல் 3 சதவீத இறப்புதான் நிகழ்கிறது. இதுவே 5 சதவீதத்திற்கு மேல் சென்றால் அச்சப்பட வேண்டும். தமிழ்நாடு போலவே அசாம், கேரளாவில் அதிகளவு யானைகள் இறக்கின்றன. ஆனால், அந்த மாநிலங்களில் எல்லாம் யானைகள் குறித்த ஆராய்ச்சி அதிகம் இல்லை. தமிழ்நாட்டில்தான், கணக்கெடுப்பு, ஆராய்ச்சி, யானை இறப்பு தடுப்பு நடவடிக்கைகள் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.

 

Tags : இந்தியாவில் மனித மோதல் காரணமாக யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம்.

Share via